தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில்,
"தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் இருந்து பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெற வேண்டுமென அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகளைப் பரிவுடன் ஏற்று. நடப்பு ஆண்டில் மேற்கண்ட துறைகளின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வை வெளிப்படைத் தன்மையுடன் இணைய வழியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வினை (counseeilng) உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி 25.11.2024-க்குள் வெளிப்படைத் தன்மையுடன் இணைய வழியின் வாயிலாக மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க இணைய வழியாகப் பெறப்படுகின்ற ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் உரிய விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும்" என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.