பொதுமக்களுக்கு, போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முதலிடம் வகிக்கின்றன. இக்கழகத்தின் மூலம் நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட கோட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்கள் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக, போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் காலிப் பணியிடங்கள் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அவற்றை நிரப்பும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக மேற்கண்ட கோட்டங்களில் விழுப்புரம் தவிர இதர கோட்டங்களில் இருந்து (கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர் மதுரை திருநெல்வேலி) காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இக்கோட்டங்களில் காலியாக உள்ள 812 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதன்மூலம் கும்பகோணம் கோட்டத்திற்கு 174 பேரும், சேலம் கோட்டத்திற்கு 254 பேரும், கோயம்புத்தூருக்கு 60 நபர்களும், மதுரைக்கு 136 நபர்களும், திருநெல்வேலிக்கு 188 நபர்களும் என 812 ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்தப் பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மூலம் நிரப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியான உரிமம் வைத்திருத்தல் அவசியம். அத்துடன், நடத்துனர் உரிமம் வைத்திருத்தல் வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதில் 18 மாதங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பொதுச் சேவை பேட்ஜ் வைத்திருத்தல் வேண்டும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முதலுதவி சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும்.
160 செ.மீ. உயரத்துடனும் 50 கிலோவுக்கு குறையாமலும் இருத்தல் அவசியம். பார்வைத் திறன் தேர்வும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஊதியம் ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.