கோவை விமான நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சாதிகளில் உயர்வு தாழ்வது என்பதை சனாதன தர்மமோ இந்து மதமோ வலியுறுத்தவில்லை. பல்வேறு தொழில்களை செய்து கொண்டிருந்தவர்கள் பல்வேறு ஜாதிகளாக பிரிந்துள்ளனர். காலங்காலமாக இருக்கும் பாரம்பரியத்தை குறை சொல்வது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாடிக்கையாக உள்ளது. இவர்கள் இன்னும் 1952-ல் இருக்கிறார்கள்.
பாரம்பரியமும் அதன் பெருமையும் காக்கப்பட வேண்டும் என்ற தமிழர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. தேவையில்லாதவற்றை தொடாமல் தமிழக மக்களின் நலனில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினால் திமுகவிற்கும் நல்லது, தமிழகத்திற்கும் நல்லது”
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து...
“அடிக்கடி குழந்தை என்பது அன்னையர் நலனுக்கு கேடு. அதேபோல் அடிக்கடி தேர்தல் என்பது ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும். ஒரே நேரத்தில் எல்லா அமைப்புகளுக்கும் தேர்தல் என்பது தேசத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன குறை கண்டு அதனை இவர்கள் வேண்டாம் என்கிறார்கள்? நல்ல முடிவுகளை வலுவான முடிவுகளை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு அடிக்கடி தேர்தல் வரும்போது பல்வேறு விதமான சமாதானங்களை செய்து கொள்ளும் நிலைக்கு அரசியல் களம் தள்ளப்படும். அது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது.
காசையே எதிர்பார்க்காத ஒரு ஆளுநர் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறார். அவருடன் திமுக பகை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் ஏதோ வாக்குறுதிகள் கொடுத்து விட்டார்கள் என்பதற்காக அவர் நீட்டை அமல்படுத்த முடியுமா என்ன? முடியாது என்று தெரிந்தே வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்கள். இப்போது முடியவில்லை என்றவுடன் ஆளுநர் மீது பழியை போடுகிறீர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம் என்பதனால் நமக்கு அது சர்வாதிகாரத்தை தந்து விடாது. எதுவெல்லாம் அரசியல் சாசனத்தில் உள்ளதோ இதெல்லாம் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் உள்ளதோ அதற்குதான் ஆளுநர் கையெழுத்திட முடியும்.
சனாதனத்தை ஒழித்தே தீருவோம் என அவர்கள் கூறிக் கொண்டே இருப்பது ' திமுக ஒழியப் போகிறது' என்பதை காட்டுகிறது. ஏழை மக்கள் காலம் காலமாக கேட்டுக் கொண்டே வரும்போது அதற்கான நேரம் வரும்போது பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அதன் பலன்கள் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும். மோடி இந்த அற்புதமான அறிவிப்பை கொடுத்துள்ளார். (200 ரூபாய் சிலிண்டர் விலை குறைப்பு தொடர்பாக). அம்பானியையும் அதானியையும் உருவாக்கியதே காங்கிரஸ்தான்.
சீமானை போன்றவர்களுக்கெல்லாம் சமுதாய நலனில் அக்கறை எங்கு இருக்கிறது. இஸ்லாமியர்களை விடுதலை செய்கிறார்களா இஸ்லாமிய தீவிரவாதிகளை விடுதலை செய்கிறார்களா என்ற வித்தியாசம் கூட தெரியாமல் இருப்பவர்களெல்லாம் பொது வாழ்க்கையில் இருப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு கேடு. கூட்டணிகளில் அரசியல் கட்சிகள் சேர்வது தொடர்பாக மோடி பார்த்துக் கொள்வார், அமித்ஷா பார்த்துக் கொள்வார், ஜேபி.நட்டா பார்த்துக் கொள்வார். அதற்கு அண்ணாமலை பதிலளிப்பார்” என்றார்.