தென்னிந்திய ஊடகங்கள் குறித்து தமிழக ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பத்திரிகையாளராக இருந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
தென்னிந்தியாவில் உள்ள காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் சிறப்பாக பணியாற்றி வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய ஊடக கருத்தரங்கில் பேசிய ஆளுநர், செய்திகள் உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர உருவாக்கப்பட்டவையாக இருக்கக்கூடாது என்றார்.
பன்வாரிலால் பேசுகையில், “எழுத்து மற்றும் காட்சி ஊடகங்கள் தென்னிந்தியாவில் சிறப்பான பணியை செய்து வருகின்றன. எனது 6 மாத கால அனுபவத்தில் காலையில் அனைத்து நாளேடுகளையும் படிப்பேன். செய்தி சேனல்களையும் கவனிப்பேன். அவற்றில் மக்கள் பிரச்னைகளை எதிரொலிப்பதாக செய்திகள் இருக்கின்றன. இதன்மூலமாக, ஆட்சி செய்பவர்கள் மக்களின் தேவையை அறிந்து கொள்ள உதவியாக இருக்கிறது” என்றார்.
மேலும் நிகழ்ச்சியில் தென்னிந்திய ஊடக கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து FOURTH DIMENSION MEDIA-வின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் பேசினார். பிராந்திய மொழி ஊடகங்களில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து ஏசியாநெட் டிஜிட்டல் நெட்வொர்க்கின் முதன்மை இயக்க அதிகாரி அனூப், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் சைதன்யா உள்ளிட்டோர் பேசினர். செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளுக்கு இடையேயான வேறுபாடு குறித்த கருத்தரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் பங்கேற்று கருத்துக்களை முன்வைத்தார்.