சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை ஆய்வு செய்ய ஒத்துழைப்பு அளிக்கும்படி தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கலாம் என கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அதன்படி சுமார் 8 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தீட்சிதர்களே அனைத்தையும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை வரவு செலவுகள் குறித்த ஆவணங்களை தர வேண்டும் என்றும் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
`சட்டபூர்வமாக கோயிலில் அனைத்தும் செயல்படுத்தப்படுகிறதா’ என்று ஆய்வு மேற்கொள்ளப்போவதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் இந்த நோட்டீஸை, சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கோயில் தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிதம்பரம் நடராஜர் கோயிலில், தீட்சிதர்களின் ஆட்சேபனைகளுக்கு மத்தியில், கனகசபை எனப்படும் பொன்னம்பலத்தில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அதற்கு தீட்சிதர்கள் தரப்பு குடியரசுத்தலைவர், பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த அடுத்த அறிவிப்பும் நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், தற்போது கோயில் நிர்வாகம் குறித்து சட்டரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்போவதாக அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.