அரசுப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் பருத்தி துணியில் பள்ளி மாணவிகள் நாப்கின் தயாரித்தனர்.
தருமபுரி அரசு ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. 25 மாணவியர்கள் பங்கேற்றுள்ள இந்த முகாம், வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகாமில் உள்ள மாணவிகளுக்கு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பள்ளி மாணவிகள் அதனை தங்களது அருகாமையில் இருப்பவர்களுக்கும் உணர்த்த ஒவ்வொரு நாளும், வெவ்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டு வந்தது.
கடந்த(நேற்று) வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘நானும் எனது பெண்மையும்’ என்ற தலைப்பில் தனியார் விளையாட்டு பள்ளியின் ஆசிரியைகள் கலந்து கொண்டு இயற்கை மற்றும் பாதுகாப்பது குறித்து விளக்கினார். மேலும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்கின்களை அதிக விலை கொடுத்து வாங்கி, கூடவே அதிலுள்ள ரசாயனங்களால் நோயையும் இலவசமாக பெற்றுக் கொள்வதற்கு மாற்றாக, பெண்களே சுயமாக நாப்கின்களை தயாரிக்க மாவட்டத்தின் முன்னோடியாக பயிற்சி வழங்கப்பட்டது.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நவீன நாப்கின்கள் விலை அதிகம் என்பதுடனும், சுத்தம் என்ற பெயரில் இவற்றில் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் கருப்பை நோய்களும் உருவாகின்றன. அதோடு பிளாஸ்டிக்கில் ஆன நாப்கின்களை மண்ணில் புதைத்தா, அவை மக்குவதற்கு சுமார் 800 ஆண்டுகள் ஆகிறது. இந்த நவீன ரக நாப்கின்களால் சுற்றுச்சுழல், காற்று மாசுபடுவதுடன் பயன்படுத்தும் பெண்களுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதனால் பருத்தியால் ஆன பாதுகாப்பான நாப்கின் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. இதற்கு புதிய பருத்தி மட்டுமின்றி பொதுவாக வீட்டில் பயனற்றுப் போன பழைய பருத்தி துணிகளை (கைலிகள், சேலைகள் உள்ளிட்ட) பயன்படுத்தியே இந்த நாப்கின்களை தயாரிக்க முடியும். துணியை அகற்றிய பிறகு வழக்கமான துணிகளை துவைப்பதை போலவே நன்றாக துவைத்து வெயிலில் காய வைத்தால் அடுத்த முறை பயன்படுத்துவதற்கு தயாராகிவிடும். பழைய துணியை தவிர்த்து புதுத் துணியை விரும்புவோர் பருத்தி துணியை வாங்கிக் கொள்ளலாம்.
நாமே தைத்துக் கொள்வதால் ஒரு நாப்கின் தயாரிக்க அதிகபட்சமாக ரூ.20 மட்டுமே செலவாகும். அதிகபட்சம் ஓராண்டுக்கு இத்துணியைப் பயன்படுத்தலாம். இதனால் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், பெண்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதால் பயிற்சி பெற்ற மாணவிகள் தாங்களே நாப்கின்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
மேலும் சுற்றுச்சூழல் மிகவும் கெட்டு வரும் இந்தச் சூழலில், கோடிக்கணக்கான நாப்கின்கள் இந்த பூமியில் வீசப்படுவதும் அல்லது நவீனம் என்ற பெயரில் அவற்றை எரிப்பதும் நமக்குப் பெருங்கேட்டை உருவாக்கும் என்பதால், பயிற்சியை பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அளித்தும், அவர்களது வீடுகளில் உள்ள பெண்கள் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு எடுத்து சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்தி பருத்தி ஆடைகளால் ஆன நாப்கின்களை பயன்படுத்த செய்யும் முயற்சியை மேற்கொள்ள உள்ளனர் அரசு பள்ளி மாணவிகள்.
தகவல்கள்: விவேகானந்தன், தருமபுரி செய்தியாளர்.