தமிழ்நாடு அரசின் கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை கொடுத்த ஒப்புகை சீட்டு வெளியீடு!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. அதை பெற்றுக் கொண்ட ஆளுநர் மாளிகை அதிகாரிகள், அதற்கு வழங்கிய ஒப்புகை சீட்டு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென கடந்த செப்டம்பரில் ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தெரிவித்தார். இதையடுத்து நேற்று மதியம், ஒருசில வழக்குகளுக்கு சட்ட விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்பான எந்தவித கோப்புகளும் ராஜ்பவனுக்கு வரவில்லை எனவும் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறியிருந்தார்கள். இதற்கு மறுப்பு தெரிவித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியிருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை சார்பாக ஒப்புகை சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், கடந்த 2022 செப்டம்பர் 12 ஆம் தேதி அனுப்பப்பட்ட கோப்பை பெற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை ஒப்புகை சீட்டு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல் ‘மே மாதம் அனுப்பிய நினைவூட்டல் கடிதத்தையும் நாங்கள் பெற்றுக் கொண்டோம்’ என ஆளுநர் மாளிகை ஒப்புகை சீட்டு வழங்கியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் இந்த கடிதங்கள்தான் வரவில்லை என ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அதை ஆளுநர் மாளிகை பெற்றதாக வழங்கிய ஒப்புகை சீட்டே தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டிருப்பதால், இரண்டு தரப்பிலும் முரண்பாடுகள் இருப்பது தெரியவருகிறது.