சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1,200 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளின் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு ஆகியவைகளில் நல்ல பண்புள்ளவர்களாகவும், திறமையானவர்களாகவும் உருவாக்குவதே ஆசிரியர்களின் பணியாகும்.
ஆசிரியர் பணியின் உன்னதமான நிலையை மறந்து மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அதே பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதில், ஃபுட்பால் விளையாட்டு போட்டியில் இந்தப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் முதல் பகுதி ஆட்டத்தில் சரியாக விளையாடாததால் எதிரணியை சேர்ந்த மாணவர்கள் அதிக புள்ளிகளை எடுத்துள்ளனர்.
இதனால் அந்தப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் அண்ணாமலை முதல் பாதி நேர புட்பால் போட்டியில் சரியாக விளையாடாத மாணவர்களை ஷு காலால் வயிற்றில் எட்டி உதைத்தும், அடித்தும் தகாத வார்த்தையில் பேசி துன்புறுத்தியுள்ள பதை பதைக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது உடற்கல்வி ஆசிரியரின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் வீடியோ ஆதாரமாக வெளியே வந்துள்ளது. அதனால் அவரிடம் விசாரணை எதுவும் நடத்த வேண்டிய அவசியம் இல்லை, இன்று விடுமுறை நாள் என்பதால் நாளை அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்படும், மாணவர்களின் நலன் காக்கப்படும் என தெரிவித்தார். அனுபவம் மிக்க உடற்கல்வி ஆசிரியராக அண்ணாமலை 20 ஆண்டுகள் பணியாற்றியும் கூட தன் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளாமல் மிருகங்களை தாக்குவது போல் செயல்பட்ட அவருடைய கொடூர குணம் பல பெற்றோர்கனள அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களை விளையாட்டுப் போட்டியில் கவனக்குறைவாக விளையாடியதாக கூறி ஷூ காலால் உதைத்து, கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை குறித்த வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் செய்தி வெளியான நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆகியோர் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.