பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள இருளர் குடியிருப்பில், பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது சுகாதாரப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள இருளர் குடியிருப்பில் சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லையென்று பொதுமக்கள் புகார் தெரிவித்ததை செய்தியாக வெளியிட்டிருந்தது புதியதலைமுறை தளம். அந்த செய்தி எதிரொலியாக கழிவறை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் சுத்தப்படுத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியில், இருளர் நலவாழ்வுமையம் மூடப்பட்டிருப்பதும் செய்தியாக வெளியாகியிருந்தது. தற்போது அதுவும் சரிசெய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
தங்கள் பகுதியினரின் குறைகளை, அதிகாரிகள் தரப்பில் செவிகொடுத்து கேட்பதில்லை என மக்கள் தெரிவித்திருந்ததை தொடர்ந்து, தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று இருளர்களின் குறைகளை ஆய்வு செய்து கேட்டறிந்து வருகின்றனர்.
அதிகாரிகளின் வரவை தொடர்ந்து, தங்களின் துயரம் இனியாவது நீங்குமென அப்பகுதி மக்கள் புது நம்பிக்கை பெற்றுள்ளனர்.