சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய, தமிழ்நாடு அரசு 3 குழு அமைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி மாநில, மாவட்ட, மண்டலம் என மூன்று வகையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வருவாய்த்துறை செயலாளர் இக்குழுவுக்கான அரசாணையை பிறப்பித்து உள்ளார்.
முதலாவது குழுவில் (மாநிலக் குழு) தலைமைச் செயலாளர் தலைவராக இருப்பாரென்றும், அவரின் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர், நீர்வளத்துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர், டிஜிபி (சென்னை மாநகராட்சி ஆணையர்), ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், நெடுஞ்சாலை துறை தலைவர், நில அளவு இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாவது குழுவில் (மாவட்டக் குழு) மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராக இருப்பாரென்றும், அவரின் கீழ் இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர பகுதிகளில் மாநகர காவல் ஆணையர்கள், மாநகராட்சி ஆணையர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது குழுவின் (மண்டல அளவிலான கண்காணிப்பு குழு) தலைவராக வருவாய் கோட்டாட்சியர் செயல்படுவார் என்றும், அவரின் கீழ் தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: மைதானத்தில் ஹாயாக படுத்திருந்த ரிஷப் பண்ட் - வைரலாகும் போட்டோ