ஆம்பூர் அருகே போதிய வகுப்பறைகள் இல்லாததால் அரசு மேல் நிலைப்பள்ளி பகுதி நேர பள்ளியாக செயல்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகள் கொட்டும் இடத்தில் புத்தகப்பையை வைத்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் இயங்கிவந்த அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 2013 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண், பெண் இருபாலர் என 1300 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இதுதான் மாவட்டத்திலேயே அதிக மாணவர்கள் பயிலும் அரசு பள்ளியாக உள்ளது. இப்பள்ளியில் ஆம்பூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம பகுதியிலிருந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தனிக் கட்டிடம் அமைத்து அங்கு மாணவர்கள் கல்வி பயின்றுவரும் நிலையில், ஏற்கனவே உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு இடிக்கப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு மாற்று கட்டிடம் தற்போது வரை கட்டப்படாத நிலையில், 6 ஆம் வகுப்பு மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் காலை முதல் பிற்பகல் வரை அரசு துவக்கப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் கல்வி பயின்று பிற்பகலுக்கு மேல் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், 8 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் பிற்பகல் முதல் மாலை கூடுதல் பள்ளி கட்டிடத்தில் உள்ள வகுப்பறையில் மற்ற வகுப்பு மாணவர்களுடன் போதிய இட வசதியில்லாமல் நெருக்கடியுடன் கல்வி பயின்றுவரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அத்துடன், பள்ளி மாணவர்களுக்கு வகுப்பறைகள் மற்றும் கழிவறை வசதிகள் ஏதும் இல்லாததால் திறந்த வெளியிலேயே கல்வி பயின்று, தங்களது புத்தகப்பைகளை குப்பைகள் கொட்டும் இடத்தில் வைத்து கல்வி பயிலும் அவல நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இதுவரையில் நியமிக்கப்படவில்லை எனவும், 1300 மாணவர்களுக்கு 26 ஆசிரியர்களே பணியில் உள்ளதாகவும், போதிய கட்டிட வசதி இல்லாததால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டதாகவும், கட்டிடம் இடிக்கப்பட்டு 6 மாதம் காலம் ஆகியும் இதுவரையில் அந்த இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பள்ளி கட்டிடம் இருந்த இடம் கால்நடைகள் கட்டி வைக்கும் இடமாக மாறியுள்ளதாகவும், தற்போது இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு உடனடியாக இதுகுறித்து மாவட்ட பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நாம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டபோது, ’’6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் காலை பள்ளிக்கு வருவார்கள். அவர்களுக்கு 5 பாடத்தையும் காலையிலிருந்து மதியம் வரை நாங்கள் கற்பித்து விட்டு மதியம் அவர்களுக்கு விடுமுறை அளித்து அனுப்பி விடுவோம். அதே போல் 8,9 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிய வேளையில் பள்ளிக்கு வருவார்கள். அவர்களுக்கு 5 பாடங்கள் எடுக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் போதிய வசதி இல்லாததால் மாணவர்களுக்கு தேர்வு வைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக கழிப்பறை செல்வதற்கு மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்’’ எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் தொடர்பு கொண்டு கேட்டபோது, மாவட்டத்திலேயே இந்த பிரச்னைக்குத்தான் மிகவும் முன்னுரிமை அளிக்கப்பட்டு அரசுக்கு கடிதங்கள் மூலம் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அரசு அறிவிப்பு வெளியானவுடன் கட்டிடங்கள் வேகமாக கட்டப்படும்’’ என்று தெரிவித்தார்.