கைக்குழந்தையுடன் ஒடுங்கி, இத்தம்பதி தங்கள் வாழ்க்கையை ஓட்டி வந்த இடம் அரசு பொதுக்கழிப்பறை.. வசிக்க இடமில்லாததால், இப்படி ஒரு அவலமான நிலையில் சிக்கி உழன்று வந்த தம்பதியின் வாழ்வில், புதிய தலைமுறையால் புது வசந்தம் வீசத்தொடங்கியுள்ளது...
சளுக்கை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின தம்பதி தினகரன் - பொன்னியம்மாள். செங்கல் சூளையில் வேலை செய்து வரும் இவர்களுக்கு, வசிக்க இடமில்லாததால் பொதுக்கழிப்பறையையே வீடாக மாறிப்போனது. இதுதொடர்பாக அப்பகுதியினர், சமூக செயற்பாட்டாளர்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை..
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்துல் காதர் கூறுகையில், “புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக அத்தம்பதிக்கு தொகுப்பு வீடு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செய்திகளை புதிய தலைமுறை மீண்டும் மீண்டும் ஒலிபரப்புவதன்மூலம் அடித்தட்டு மக்களுக்கு உரிய வசதிகள் கிடைக்க உதவியாக இருக்கிறது. புதிய தலைமுறைக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி, புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. அதுமுதலே அவர்களது வாழ்க்கையில் மாற்றம் நிகழத் துவங்கியது.
செய்தியை கண்ட வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், தினகரன் - பொன்னியம்மாள் தம்பதியின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். உடனடியாக, அவர்கள் தற்காலிகமாக வசிப்பதற்கு, தகர கொட்டகை அமைத்து தரப்பட்டது. மேலும் அவர்களுக்கு பட்டா, ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையையும், அதிகாரிகள் வழங்கினார். மேலும் அவர்களுக்கு, C T D P திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடு கட்டும் பணிகள் தொடங்கியது.
4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீட்டின் பணிகள் முடிவடைந்த நிலையில், வீடு பழங்குடியின தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வீட்டை வட்டாட்சியர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வீடு பெற்ற தம்பதி, வீட்டின் முன்பாக பேனர் கட்டி புதிய தலைமுறைக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.
வீடுபெற்ற பயனாளி பொன்னியம்மாள் கூறுகையில், “நாங்கள் வீடு இல்லாமல் கழிவறையில்தான் வசித்து வந்தோம். செய்தி வெளிவந்ததால் அரசாங்க வீடு கிடைத்துள்ளது. அரசாங்கத்திற்கும் புதிய தலைமுறைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
குரலற்றவர்களின் குரலாக ஒலித்து வரும் புதிய தலைமுறை, அவர்களது பிரச்னைகளை தொடர்ந்து அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று வருகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் பிரச்னைகள் தீர்க்கப்படுவதை விட மகிழ்ச்சியானது எதுவுமில்லை.. வீடு கிடைத்ததற்கு தினகரன் - பொன்னியம்மாள் தம்பதி மகிழ்வதை போலவே, புதிய தலைமுறையும் உள்ளம் மகிழ்கிறது..