அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
Published on

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வேண்டுகோளை ஏற்று அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஏற்கெனவே புறநோயாளிகள் பிரிவில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தனர். மருத்துவர்கள் போராட்டத்தால் ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி முகமது யுனீஸ் ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு மருத்துவர்கள் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பலமுறை தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்பதால், போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டதாக தெரிவித்தார். இதற்கு, 7-ஆவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக தமிழக நிதித்துறை செயலரின் கீழ் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ஒருநபர் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் ஆகும்? அதனடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலம் ஆகும்? எனக் கேள்வி எழுப்பினர். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். நீதிபதிகள் வேண்டுகோளை ஏற்று அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com