கன்னியாகுமரி அருகே அரசு பேருந்தில் வழங்கப்பட்ட மின்னணு பயணசீட்டில் ஊர் பெயர் "தக்கலை" என்பதற்கு பதிலாக "தக்காளி" என குறிப்பிடபட்டிருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மதுரை மாவட்டம் அரசுப் போக்குவரத்து பணிமனை போடி கிளையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு தினமும் காலை அரசுப் பேருந்து ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், மில்டன் என்பவர் இந்த பேருந்தில் மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலைக்கு பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பேருந்தில் அவருக்கு வழங்கப்பட்ட மின்னணு பயண சீட்டில் "தக்கலை" என்ற ஊரின் பெயருக்கு பதிலாக "தக்காளி" என குறிப்பிட்டிருந்தது.
இதைக்கண்ட மில்டன் அந்தப் பயணச் சீட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். இதைப் பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் வடிவேலு புகைப்படங்களுடன் பயணச் சீட்டையும் இணைத்து காமெடியாக மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழக அரசு பேருந்து மின்னணு பயண சீட்டில் கவனக்குறைவால் நடைபெற்ற இத்தகைய தவறை மீம்ஸ்கள் மூலம் சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.