"மின்வாரிய பணியிடங்களை நிரப்ப, தனியாரிடம் ஒப்படைத்து திறனற்றதாகிவிட்டதா அரசு?"- தினகரன்
மக்களின் அத்தியாவசிய தேவையான மின்விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகளைக் கூட நேரடியாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு திறனற்றதாக தமிழக மின்சாரத்துறை மாறிவிட்டதா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப முயற்சிக்கும் பழனிசாமி அரசின் நடவடிக்கை கடுமையான கண்டனத்திற்குரியது. ஏற்கெனவே மின்வாரிய பொறியாளர் பணிகளுக்கு வெளிமாநிலத்தவர்களை நியமித்ததால், தமிழகத்தில் பொறியியல் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இப்போது பராமரிப்புப் பணியிடங்களுக்கு ஆள் எடுப்பதையும் தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கும்? இதனால் மின் வாரியத்தில் வயர்மேன், ஹெல்பர் போன்ற வேலைகளுக்கு செல்லலாம் என காத்திருக்கும் ஐடிஐ படித்த ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் கனவிலும் இந்த ஆட்சியாளர்கள் மண் அள்ளி போட்டிருக்கிறார்கள்.
முதலமைச்சரும், அவருக்கு நெருக்கமான அந்தத் துறையின் அமைச்சரும் மின்துறை வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு அடுத்தடுத்து இழைக்கப்பட்டு வரும் இந்த அநீதிக்கு துணைபோவது ஏன்?, அதன் பின்னணி என்ன? என்பன போன்ற சந்தேகங்கள் மக்களிடம் ஏற்பட்டிருக்கின்றன.
மக்களின் அத்தியாவசிய தேவையான மின்விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகளைக் கூட நேரடியாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு திறனற்றதாக தமிழக மின்சாரத்துறை மாறிவிட்டதா? அவ்வளவு திறமையாக அந்தத்துறையின் அமைச்சர் நிர்வாகம் செய்து வருகிறாரா? இப்படியே போனால் மின்வாரியத்தை மொத்தமாக தனியாருக்கு தாரை வார்த்துவிடுவார்களோ? என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
எனவே மின்பராமரிப்பு பணிகளை டெண்டர் மூலம் தனியாரிடம் ஒப்படைத்து, அந்த பணிகளுக்கு அவர்கள் வழியாக ஊழியர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும் என பழனிசாமி அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்