திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், துணிப் பை, சணல் பை ஆகியவற்றை கொண்டுவந்தால், குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 6ஆம் நாள் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. வெள்ளித்தேரில் அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், துணிப் பை, சணல் பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்குப் பைகளை கொண்டு வந்தால் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயமும், 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.