என் தந்தை எனக்கு கொடுத்ததை தவிர வேறு எந்தச் சொத்தும் என்னிடம் இல்லை என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபண்ணா தெரிவித்துள்ளார். மேலும் தன் மீது அவதூறு குற்றச்சாட்டு அளித்த கராத்தே தியாகராஜன் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை, கராத்தே தியாகராஜன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், என் மீது மட்டுமே அழுத்தம் கொடுக்கிறார்கள் எனத் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் மீதும் அவர் விமர்சனங்களை கூறினார். குறிப்பாக காங்கிரசின் கோபண்ணா குறித்து பேசிய கராத்தே தியாகராஜன், “கோபண்ணா கொள்ளையடித்தவர்’’ என்று தெரிவித்தார்.
இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்த கோபண்ணா, கராத்தே தியாகராஜன் திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்படுத்தும் விதமாக பேசினார். ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறினார். ஏதோ உள்நோக்கத்துடன் திமுக-காங்கிரஸ் கூட்டணியை முறிக்கும் விதமாக கராத்தே தியாகராஜன் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். அதன் காரணமாகவே அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் மீது அவர் கூறிய குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. அவதூறானவை. நான் எந்தச் சிறிய தவறையும் செய்யவில்லை.
காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் வாடகை உடன்படிக்கையின் படியே நான் தொழில் செய்கிறேன். நான் இதுவரை ரூ.65 லட்சம் வாடகை செலுத்தியுள்ளேன். இதுவரையிலும் நான் நேர்மையாகவே இருந்து வருகிறேன். என் தந்தை எனக்கு கொடுத்ததை தவிர வேறு எந்தச் சொத்தும் என்னிடம் இல்லை. அபகரிப்பதையே தொழிலாக கொண்டவர்கள் விரக்தியில் பேசுகிறார்கள். என் மீது அவதூறு குற்றச்சாட்டு அளித்த கராத்தே தியாகராஜன் மீது காவல் ஆணையரிடம் வரும் திங்கட்கிழமை புகார் அளிக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.