சென்னையில் வீடுகளுக்கே சென்று வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் பணியை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இன்று முதல் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக தற்போது வரை 2 ஆயிரத்து 197 வியாபாரிகள் அனுமதி பெற்றுள்ளனர். இதில், தொலைபேசி மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும். அதுமட்டுமல்லாமல், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை ஆப் மூலமும் முன்பதிவு செய்யலாம்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஜூன் 7 வரை மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொடங்க விழாவில், , சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு கோவை மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இருந்து அதிக தடுப்பூசிகளை பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.