அதிமுக அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதாகவும், ஆனால் தேர்தல் வந்தால் மட்டும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் வேஷம் போடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் இரண்டாவது நாளாக பரப்புரை மேற்கொண்டு வரும் முதல்வர், புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அப்பகுதியில் பரப்புரை செய்த அவர், மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் எனத் தெரிவித்தார். மேலும், ''கடவுளை இழிவுபடுத்தியவர் கையிலேயே கடவுள் வேல் கொடுத்துள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியே பேசுவது ஒன்று, உள்ளே இருப்பது ஒன்று. அதிமுகவிற்கு தான் இறைவன் வரம் கொடுப்பார். மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் மூலம் கடவுள் தண்டனை கொடுப்பார்'' என்றார்
முன்னதாக நேற்று , திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அம்மையார் குப்பத்தில் திமுக சார்பில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக இந்து வேத பண்டிதர்கள் கும்ப மரியாதை செய்தனர். பின்னர் திமுக சார்பில் 3 லட்சம் மதிப்பில், திருத்தணி முருகப் பெருமானிடம் பூஜை செய்த வெள்ளி வேல் வழங்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் அதனை பெற்றுக் கொண்டார்.