”நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமி, வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து 2012ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விடுவிக்கப்பட்டு, அதே ஆண்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த இரண்டு வழக்குகளையும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்தார்.
அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரிக்கவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதி, ஐ.பெரியசாமியும், பா.வளர்மதியும், வழக்கு விசாரணையை முறையாக எதிர்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டினார். கீழமை நீதிமன்ற செயல்களைப் பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என தோன்றுவதாக தெரிவித்த அவர், இதுபோன்ற வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிப்பதால், தன்னை வில்லனாக அனைவரும் பார்ப்பதாகக் கூறினார். இதையடுத்து, இரு வழக்குகளின் விசாரணையையும் அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.