விளையாட்டுப் போட்டிகளில் சாதித்து வெற்றிகளை குவிக்கும் பெண்கள் வெகுசிலரே. வெற்றிகளை வசமாக்கியும், பொருளாதாரத்தில் தோற்றுப்போகும்போது, பாராட்டுச்சான்றுகள் துணைவருவதில்லை. அப்படி சைக்கிள் வீராங்கனை ஒருவர், போட்டிகளில் பங்கேற்க பொருளாதார உதவி வேண்டி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி... வாகனங்கள் அசுர வேகத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை... பரபரக்கும் சாலையில் பயணிப்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சைக்கிள் ஓட்டி செல்பவர் ஐஸ்வர்யா. திருச்சி, ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஐஸ்வர்யாவுக்கு, சிறு வயது முதலே சைக்கிள் பந்தயத்தில் தனி ஆர்வம் உண்டு. கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலுமே பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்துள்ள இவர், மாநில அளவில் நடத்தப்பட்ட சைக்கிள் பந்தயங்களில், கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க பொருளாதார உதவிகள் தேவைப்படுவதால், தற்போது அரசின் உதவியை நாடி நிற்கிறார் ஐஸ்வர்யா.
போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏற்ற சைக்கிளை வாங்குவதற்கு, சுமார் 5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதாக கூறும் ஐஸ்வர்யாவின் தந்தை ஜெயராமன், தனது சொற்ப வருமானம், குடும்ப செலவுகளுக்கே போதுமானதாக இல்லை எனவே வேதனையுடன் தெரிவித்துள்ளார். மகளின் கனவை நிறைவேற்ற முடியாமல் மனவருத்தத்தில் அவர் காலங்களை நகர்த்தி வருகிறார்.
தமிழக அரசு போதுமான பயிற்சியும், வழிகாட்டுதலையும் அளித்தால், தேசிய அளவில் மட்டுமல்லாம், ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று, ஐஸ்வர்யா இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என கூறுகிறார் அவரின் உடற்கல்வி ஆசிரியை. திறமை இருக்கும் இதுபோன்ற வீராங்கனைகளை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டுமென்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.