திண்டுக்கல்லில் தனக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத்தரக் கோரி செல்போன் டவர் மீது ஏறி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலை தென் மலையைச் சேர்ந்தவர் மூக்கையா. இவருக்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலத்தை மணி என்பவர் ரூ.2 லட்சம் கொடுத்து ஏமாற்றி எழுதி வாங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மூக்கையா தாசில்தார் மற்றும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மூக்கையா தனது நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி நேற்றிரவு; நாகல்நகர் சிறுமலை செட் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் மற்றும் தீயணைப்பு படையினரிடம் மூக்கையாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், அதற்கு மூக்கையா ஒத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் தீயணைப்புத் துறையினர் செல்போன் டவர் மீது ஏறி மூக்கையாவை மீட்க முயன்றனர். அப்போது தீயணைப்புத் துறை வீரர் மீது மூக்கையா பட்டாசை கொளுத்திப் போட்டார். இதனையடுத்து மூக்கையாவிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனையடுத்து ஒருமணி நேர போராட்டத்திற்குப் பின் மூக்கையா செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.