ரிக் இயந்திரம் மூலம் குழந்தையை மீட்கும் பணி ஏன் தாமதமாகிறது என்பது குறித்தும் அங்குள்ள பாறைகளின் தன்மை குறித்து சில தகவல்கள் தெரிவந்துள்ளன.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் 71 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து நடந்து வருகிறது.
ரிக் இயந்திரத்தால் பாறைகளை உடைக்க முடியாததால் போர்வெல் மூலம் பாறைகளைத் துளையிட்டு குழியை தோண்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போர்வெல் மூலம் துளையிடும் பணிகள் முடிவடைந்து தற்போது மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் அகலப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தப் பணிகள் ஏன் தாமதப்படுகிறது? நிலவியல் ரீதியாக என்ன மாதிரியான சிக்கல்கள், பின்னடைவுகள் உள்ளன என்பது குறித்து ஓய்வு பெற்ற நிலவியல் பேராசிரியர் சுப்பிரமணியன் சில விளக்கங்கள அளித்துள்ளார். அவர் இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பகிர்ந்து கொண்டுள்ள தகவலில், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த பாறைகளையுமே இரண்டு வகையாக பிரித்துவிடலாம். ஒன்று; எளிமையான பாறைகள். மற்றொன்று; கடினமான பாறைகள். இதில் மணப்பாறையை பொறுத்த அளவில் கடினப் பாறைகள்தான் அதிகமாக உள்ளன. இந்தப் பாறைகள் எல்லாம் ‘குவாட்ஸ்’ வகையைச் சார்ந்தவை என நிலவியல் கணக்கில் கணித்துள்ளோம். இந்தப் பாறைகள் பொதுவாக மற்ற கனிமங்களோடு மிக கடினமாக பொருந்தி இருக்கும்.
ஆகவே அதனைப் பிரித்து எடுப்பது கடினம். மணப்பாறையில் உள்ள பாறைகள் எல்லாம் கிட்டத்தட்ட 2,300 மில்லின் ஆண்டுகள் பழமையானவை. 230 கோடி வருஷம் பழமையான பாறைகள். தஞ்சாவூரிலேயோ அல்லது கும்பகோணத்திலேயோ உள்ள பாறைகளை போல இல்லை. இது உறுதித் தன்மை அதிகம் வாய்த்தவை. ஆகவேதான் இந்தப் பகுதியில் ஆழ்த்துளை இட்டு எடுக்க கூடிய வசதி மிகவும் சிரமமானது. அப்படியே பாறையை ஓட்டை போட்டு அகற்றுவது கடினம்.
ஆனால் உடைத்து அகற்றுவது என்பது எளிது. ஆகவேதான் மணப்பாறையில் பாறைகளை உடைத்து உள்ளே போக காலதாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தக் காலதாமதம் கட்டாயம் நடக்கதான் செய்யும். இதில் ஓட்டை போடுவது மட்டுமே நமது இலக்காக இருந்தால் அதை அடித்து உடைத்து எடுத்து விடலாம். ஆனால் நம் இலக்கு அதுவல்ல; குழந்தையை காப்பாற்றுவது. ஆகவே நிலம் அதிராமல் வேலையை செய்ய வேண்டும். நிலத்தில் அசைவு வந்தால் அது குழந்தையை பாதிக்கும். ஆகவேதான் மிக நிதானமாக இந்த வேலை நடைபெற்று வருகிறது” என்கிறார்.