சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணம் எடுத்துச் செல்லப்படுவதாக தாம்பரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் சந்தேகத்திற்கிடமாக 3 பேர் பயணம் செய்தனர். அவர்களிடம் சோதனை செய்ததில் 3 கோடியே 99 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், சதீஷ் (34), என்பவர், ‘திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தான் என்னுடைய முதலாளி, நான் புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய புளு டைமண்ட் விடுதியின் மேலாளராக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சதீஷின் தம்பி நவீன் (31), மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் பெருமாள் (24), ஆகியோரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் வீட்டிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நெல்லையில் நமது செய்தியாளரிடம் பேசிய நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், ”எனக்கு நெருக்கடி கொடுக்க சிலர் நினைக்கின்றனர். என்னை டார்கெட் செய்கின்றனர்.
எனக்கு தொடர்புடைய இடத்தில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. மக்களை திசைதிருப்ப திமுகவினர் செய்த வேலை இது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி எனக்குச் சொந்தமானது இல்லை” என்று விளக்கம் அளித்தார்.