செய்தியாளர்: பிரவீண்
கோவை மாவட்டம், சூலூரில் தமிழக பாஜக தலைவரும் கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நேற்றிரவு 10 மணிக்கு மேல் பரப்புரையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஓண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரம், இருகூர் பிரிவு பகுதிகளில் இரவு 10.30 மணிக்கு மேல் பரப்புரை மேற்கொள்ள முயன்ற அண்ணாமலையை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பிரசார வாகனத்தை விட்டு இறங்கி வந்த அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக தேர்தல் அலுவலர்கள் சூலூர் மற்றும் சிங்காநல்லூர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இது தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மற்றும் 300 நபர்கள் மீது அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு என்ற இரு பிரிவுகளின் கீழ் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதே போல சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினர் மீது அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.