“தோனி சொன்ன வார்த்தையால்.. உலகக் கோப்பையில் சதத்தை தவறவிட்டேன்” - மனம் திறந்த காம்பீர்

“தோனி சொன்ன வார்த்தையால்.. உலகக் கோப்பையில் சதத்தை தவறவிட்டேன்” - மனம் திறந்த காம்பீர்
“தோனி சொன்ன வார்த்தையால்.. உலகக் கோப்பையில் சதத்தை தவறவிட்டேன்” - மனம் திறந்த காம்பீர்
Published on

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தன்னால் எதனால் சதம் அடிக்க முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 274 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பூஜ்ஜியம் ரன்னில் முதல் விக்கெட் போன பிறகு களமிறங்கி 97 ரன்கள் குவித்த கவுதம் காம்பீர். 122 பந்துகளில் 97 ரன்கள் குவித்த அவர் 3 ரன்கள் எடுக்கமால் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அப்போது அவருடன் தோனி களத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். பின்னர் தோனி உள்ளிட்டோரின் சிறந்த பேட்டிங்கால் அன்று இந்தியா வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி முடிந்த 9 ஆண்டுகள் கடந்தவிட்ட நிலையில், அன்று சதத்தை தவறவிட்டது தொடர்பாக தற்போது கவுதம் காம்பீர் மனம் திறந்திருக்கிறார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள கவுதம் காம்பீர், “97 ரன்களில் நான் ஆட்டமிழந்த அன்று என்ன நடந்தது ? என்ற கேள்வி என்னிடம் பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது. அவர்களிடம் எல்லாம், நான் எனது தனிப்பட்ட ஸ்கோரை பொருட்படுத்தாமல் அணியின் இலக்கை நோக்கி விளையாடினேன் என்று கூறியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், “எனக்கு நினைவிருக்கிறது, அன்று ஒரு ஓவர் முடிந்த உடன் என்னிடம் பேசிய தோனி, நீங்கள் சதம் அடிக்க இன்னும் மூன்று ரன்கள் தான் இருக்கின்றன என்று நினைவு படுத்தினார். அதுவரை அணியின் இலக்கை மட்டுமே அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடிக்கொண்டிருந்த எனக்கு, உடனே எனது தனிப்பட்ட ஸ்கோர் மீது கவனம் சென்றது. அதனால் எனது ரத்த அழுத்தம் அதிகரித்தது. அந்த ஒரு பதட்டத்தில் நான் ஆட்டமிழந்துவிட்டேன். அதை நினைவில் கொள்ளாமல் நான் அணியின் இலக்கை மட்டுமே கவனித்து விளையாடியிருந்தால் எளிதாக சதத்தை கடந்திருப்பேன்” என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com