சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவேன் என கவுசல்யா தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் (22) கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினார். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் 8 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, பிரசன்னா குமார் ஆகிய 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், 9-ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11-ஆவது குற்றவாளியான மணிகண்டனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீர்ப்பு குறித்து கவுசல்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " என் சங்கர் சிந்திய ரத்தத்திற்காக உரிய நீதி வேண்டி ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த வகையில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். இது நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. கொலை வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, குற்றவாளிகளை நீதிமன்ற வளாகத்தில் வைத்திருந்தது அரிதிலும் அரிது. அந்த வகையில் எனது வழக்கை தனித்துவத்தோடும், சாதிய பின்புலத்தோடும் நீதித்துறை அணுகியதாகவே கருதுகிறேன். இது சாதிய ஆணவக் கொலைகளுக்கு நல்ல முன் உதாரணமாக அமையும் என நம்புகிறேன். அதிலும் பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை குறித்த எனது கருத்து, வேறாக இருந்தாலும் சாதி வெறியர்களுக்கு இனி கௌரவக் கொலை செய்ய பெரும் மனத்தடையையும், அச்சத்தையும் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தும். அந்த வகையில் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். எனது வழக்கிற்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு இந்தியாவிலேய முதல்முறை என்கிற வகையில் எனது காத்திருப்பு வீண் போகவில்லை. இரட்டை தூக்கு, இரட்டை ஆயுள் என்பது குற்றவாளிகள் எந்தவகையிலும் தப்பிவிடக் கூடாது என்பதையே காட்டுகிறது. சங்கர் கொலை வழக்கில், அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். அவர்களுக்கும் உரிய தண்டனை கிடைக்கும் வரை எனது சட்ட போராட்டம் தொடரும். தண்டனை கிடைத்தவர்கள் அதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினால், அதனை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்காடுவேன். இந்தப் போராட்டத்தில் ஒருபோதும் சளைக்க மாட்டேன். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த மூவரின் விடுதலை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்துவேன். சட்டப் போராட்டத்திலும், களப் போராட்டத்திலும் இருந்து ஒருபோதும் ஓய மாட்டேன். மூவரின் விடுதலையை எதிர்த்து கடைசி வரை போராடுவேன்" என்றார்.