எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதிக்கொண்ட விவகாரத்தால் எரிவாயு நிரப்பாமல் கப்பல்கள் கடலிலே இருப்பதால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளிலிருந்து சமையல் எரிவாயு, கப்பல்களில் டன் கணக்கில் கொண்டு வரப்பட்டு எண்ணூர் துறைமுகத்திலிருந்து குழாய்கள் மூலம் இந்தியன் ஆயில் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டன. எழுபத்தி ஐந்தாயிரம் டன் சமையல் எரிவாயு இந்தியன் ஆயில் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட ன. எரிவாயு உற்பத்தி தீர்ந்த நிலையில், மீண்டும் எரிவாயு நிரப்புவதற்காக கத்தாரிலிருந்து இரண்டு கப்பல்கள் துறைமுகத்திலிருந்து மூன்று நாட்டிக்கல் மைல் தொலைவில் முப்பத்து இரண்டு மெட்ரிக் டன் எடையுடன் சமையல் எரிவாயுடன் கடலில் காத்துக்கொண்டிருக்கின்றன.
விபத்துக்குள்ளான கப்பல்கள் விவகாரம் இன்னும் முடியாத நிலையில் இரண்டு கப்பல்களிலிந்து துறைமுகத்தில் எரிவாயு இறக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.எரிவாயு இல்லாததால், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் இந்தியன் ஆயில் பெட்ரானஸ் நிறுவனங்களில் உற்பத்தி நடைபெறவில்லை. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி ஆந்திரா, கர்னாடகம், கேரளா,புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.