நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குறுவை சாகுபடி செய்யப்பட்ட விவசாய நிலங்களின் வழியாக, கெயில் நிறுவன எரிவாயு குழாய் பதித்து வருகிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மேலமாத்தூரிலிருந்து நரி மனத்துக்கு, கெயில் நிறுவனம் விவசாய நிலங்களின் வழியே குழாய் பதித்து இயற்கை எரிவாயுவை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. அதற்காக தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்குழாய் செல்லும் மேமாத்தூர், செம்பனார்கோவில், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூர், ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களின் வழியாக குழாய் பதிக்க கெயில் நிறுவனம் தற்போது பணிகளை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இப்பகுதி விவசாய நிலங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர். பல வயல்களில் குறுவை பயிர்கள் இளம் பயிர்களாக வளர்ந்து நிற்கின்றன. நடவுப் பணிகள் ஆங்காங்கே பரவலாக நடைபெற்றும் வருகிறது. இந்தச் சூழலில் குறுவை சாகுபடி வயல்களின் வழியாக, பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன், குழாய் பதிப்பு பணியை கெயில் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக பசுமையாக காட்சியளிக்கின்ற குறுவை பயிர்களுக்கு நடுவே சாகுபடி பயிர்களை சேதப்படுத்தி குழாய் பதித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் 8 பேர் மீது செம்பனார்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் போலீசாரின் அச்சுறுத்தலுக்கு பயந்து வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய்களை எடுத்துச் செல்லாமல், சாலையோரத்தில் குழாய்களை அமைத்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் முழுமையும் கோடை சாகுபடி பெருமளவு நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய கெயில் குழாய் பதிப்பு பணி குறுவை சாகுபடிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு தருவோம் என கெயில் நிறுவனம் கூறியிருந்த நிலையில். வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இங்கு விவசாயிகளுக்கு கொடுக்கப்படுவதாகவும், எங்களுக்கு பணம் என்பது தேவையில்லை எங்களுடைய விவசாய நிலம் பாதிக்கப்படாமல் இருந்தாலே போதும் என இங்குள்ள விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி உணவு உற்பத்தியில் டெல்டா மாவட்டம் எப்பொழுதுமே முதன்மையாக இருந்து வருகிறது அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சனையின் காரணமாக விவசாயம் என்பது குறைந்து கொண்டு வரும் நிலையில், தற்போது கெயில் மற்றும் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் மிகப்பெரிய அளவில் தமிழகம் உணவு உற்பத்தியில் பின் தங்கும் சூழ்நிலை உறுவாகியுள்ளது. இதற்கு உடனடியாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலங்களில் குழாய் பதிக்க அனுமதிக்கக் கூடாது என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.