பூண்டு விலை வெகுவாக சரிந்துள்ளதால் அறுவடைக்கு தயாராகியுள்ள பூண்டின் விலையும் சரியும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெருமளவு வாங்கப்படும் விதைப்பூண்டு, இந்த ஆண்டு விலை வெகுவாக சரிந்துள்ளது. குறுகியக் கால பயிர், குறைந்த நீரில் செலவு என்பதால் பல விவசாயிகளுக்கு விதைப்பூண்டு பயிரிடுதல் புதிய வாழ்வாதாரத்தை வழங்கியது. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பல கிராமங்களில் ஒரு லாப பயிராக விதைப்பூண்டு இருந்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்.
பயிர்ச் செலவு, நீர்ப்பாசன முறைகள் மற்றும் விதை ஆகியவற்றைப் பொருத்து ஏக்கருக்கு சராசரியாக 4 டன்கள் வரை மகசூல் இருக்கும். பூண்டு முதிர்ச்சியடைய 100 முதல் 120 நாட்களை எடுக்கும். பொதுவாக மார்ச் மாதங்களில் பயிர் அறுவடை செய்யப்படும். கடந்த ஆண்டுகளில் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பூண்டு சாகுபடியில் வருவாய் குறைந்து, விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பூண்டு விலை கிலோ ரூ.200ல் இருந்து ரூ. 50 ஆக குறைந்ததுள்ளது. இதன் காரணமாக தற்பொழுது அறுவடைக்கு தயாராகியுள்ள மலைப்பூண்டின் விலையும் சரியும் என மேல்மலை பூண்டு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.