கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழகம் வருகிறது.
கஜா புயல் சேதங்களுக்கு 14 ஆயிரத்து 910 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கஜா புயல் பாதிப்புகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடாக 4 கோடியே 50 லட்சம் ரூபாய் உடனடி நிவாரணமாக தரவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க 200 கோடியை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. குடிசை மற்றும் வீடுகள் சேதத்திற்கு ஆறாயிரம் கோடி ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், 100 கோடி ரூபாயை உடனடி தரவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. கால்நடை உயிரிழப்புக்கு உடனடி 1 கோடியே 50 லட்சம் ரூபாய் உடனடி நிவாரணமாக தேவை என்று தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் தோட்டப்பயிர் சேதத்திற்கு 625 கோடி ரூபாயும், உடனடி நிவாரணமாக 87 கோடி ரூபாயும் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதங்களை சரிசெய்ய 7 ஆயிரத்து 77 கோடி ரூபாயும் உடனடி நிவாரணமாக 685 கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் கோரியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க, 100 கோடி ரூபாயும், உடனடி நிவாரணமாக 76 கோடி ரூபாயும் ஒதுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மொத்தத்தில் கஜா சேதங்களுக்கு நிவாரணமாக 14 ஆயிரத்து 910 கோடி ரூபாய் நிவாரண உதவியாகவும், அதில் உடனடியாக 1431 கோடி ரூபாயை தர வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை மனுவாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழகம் வருகிறது. இந்தக் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர், நிவாரணம் வழங்குவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.