கஜா புயல் நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல், கடலூர்- பாம்பன் இடையே இன்று நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது காரைக்காலின் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது. 16 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ முதல் 110 கி.மீ வரை தீவிர புயலாக கரையை கடக்கவுள்ளது. புயலினால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சேதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடுகள் மற்றும் ஷீட் வீடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை 67,168 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலூரில் 10,420 பேர், நாகையில் 44,087 பேர், ராமநாதபுரத்தில் 913 பேர், தஞ்சையில் 4,678 பேர், புதுக்கோட்டையில் 1,881 பேர் மற்றும் திருவாரூரில் 5,189 பேர் முகாம்களில் உள்ளனர்.
கஜா புயலின் போது செயல்படுவதற்காக பாதிப்பிற்குள்ளாகும் 7 மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்றும், அரசு மற்றும் தாலுகா மருத்துவனைகளில் கூடுதல் மருத்துவர்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூரில் 289 முகாம்களில் 67,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர்கள் இரவிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.