மின் கட்டண உயர்வை திரும்பப்பெறா விட்டாலும், மேலும் உயர்த்த வேண்டாம் என தமிழக அரசை வலியுறுத்தி வருவதாக, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் சுந்ததராமன் கூறியுள்ளார்.
ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள், துணை கருவிகளின் 14வது சர்வதேச கண்காட்சி, கோவையில் வரும் 21 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் சுந்தரராமன், ”இந்த காண்காட்சியில் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், 260 அரங்குகளில் தங்கள் பொருட்களை கண்காட்சியில் வைக்க உள்ளனர். இதில் ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஜவுளித்துறையினரும் பங்கேற்கவுள்ளனர். இந்த கண்காட்சியின் மூலம் ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்.
இனி மின் கட்டண உயர்வை தொழில்துறை தாங்காது; மின் கட்டண உயர்வை திரும்பப்பெறா விட்டாலும், மேலும் உயர்த்த வேண்டாம் என தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். அதேபோல் மத்திய அரசு பருத்தி விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.