கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு நிதி ஒதுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மே 17 வரை இணையவழி மூலமாக ரூ.29.44 கோடி, நேரடியாக ரூ.39.56 கோடி என மொத்தம் ரூ.69 கோடி நன்கொடையாக வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு நிதி ஒதுக்க மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ரூ. 69 கோடியில் கொரோனா சிகிச்சைக்கு முதற்கட்டமாக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரெம்டெசிவிர், உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயிலில் கொண்டுவரும் கண்டெய்னர்களை வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.