செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இந்த கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு முதல் தெய்வானை என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 26 வயதாகும் தெய்வானை யானைக்கு ராஜகோபுரம் பகுதியில் தங்குவதற்கு குடில் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு செல்லும் பக்தர்கள் யானைக்கு உணவுகள் வழங்குவது, செல்போனில் படம் பிடிப்பது வழக்கம். ஆனால், தற்போது யானை உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்கு யாரும் நேரடியாக உணவுகள் ஏதும் வழங்க முடியாத வகையில் குடிலில் சிறிய அளவிலான வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் யானைக்கு உணவு கொடுக்க வேண்டுமென்றால் பாகன்கள் மூலமாக மட்டுமே வழங்கமுடியும்.
இந்த யானைக்கு தலைமை பாகனாக ராதாகிருஷ்ணன் (57), பாகன்களாக செந்தில்குமார் (47), உதயகுமார் (46) ஆகிய இரு சகோதரர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் ராதாகிருஷ்ணன், பணி முடிந்து மதிய உணவிற்காக வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது பாகன் உதயகுமாரும் அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம், பலுகலைச் சேர்ந்த சிசுபாலன் என்ற முன்னாள் ராணுவ வீரரும் யானை குடிலுக்கு வந்துள்ளனர்.
அப்போது இருவரையும் யானை தாக்கியுள்ளது. இதில், சிசுபாலன் மற்றும் உதயகுமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் வேகமாக பரவியதை அடுத்து அரசு மருத்துவமனையில் நூற்றுக் கணக்கானோர் திரண்டனர். பாகனின் மனைவி, குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நிலைகுலையச் செய்தது. கோயில் வளாகத்தில் பாகன் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்ததையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு, சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையை பார்வையிட்டனர். அதற்கு தொடர்ந்து திருநெல்வேலி வனத்துறை மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்த உண்மை தகவலை அறிவதற்காக கோயில் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்
இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன் பேசுகையில்... “திருச்செந்தூர் யானை தெய்வானை மிகவும் அமைதியான மிருகம். தற்போதும் அது அதன் அமைதி தன்மையிலேயே உள்ளது. யானை மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மிருகம். தனக்கு நெருக்கமானவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது உணவுகூட உட்கொள்ளாது. அதுதான் இங்கேயும் நடக்கிறது. இதுபோன்ற நிலையில் இங்கிருந்து யானையை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. உணவு உட்கொள்ளாததால், யானைக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும். விரிவான விசாரணக்குப் பிறகே முழுவிபரம் தெரியவரும்” என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் வனசரக அலுவலர் கவின் ஒரு முக்கிய தகவலை தெரிவித்தார். அதன்படி, “பாகனின் உறவினர் சிசுபாலன், யானை அருகே நின்று நீண்ட நேரம் செல்ஃபி எடுத்துள்ளார். அதன்பின் யானையே தொட்டுள்ளார். புதிதாக ஒரு நபர் தன்னை தொட்டதை பொறுக்காத யானை சிசுபாலனை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியது. அவரை காப்பாற்ற வந்த யானை பாகன் உதயகுமாரையும் தாக்கியது தெரிய வந்துள்ளது. உதயகுமாரை தாக்கிய பின்னர்தான் தன்னுடைய பாகன் என்பதை புரிந்து கொண்ட யானை, அவரை எழுப்ப முயன்றுள்ளது” என்று தெரிவித்தார்.
யானை மிதித்து உயிரிழந்த பாகன் உதயகுமார் மீது யானை மிகுந்த அன்பாக இருக்கும் என்கின்றனர் அப்பகுதியினர். இந்த யானையை தினந்தோறும் திருச்செந்தூர் கோயில் கிரிபிரகாரத்தை சுற்றி 3 முறை அழைத்துச் சென்று வருவாராம் உதயகுமார். அதுமட்டுமல்லாமல் யானை குளிக்கும் குளத்தில் யானையை மிகவும் அன்புடன் குளிக்க வைப்பாராம். அப்போது யானை பாகன் உதயகுமாரிடம் விளையாடி மகிழுமாம். இந்த சூழலில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.