முழு ஊரடங்கு.. அத்துமீறி வெளியே வந்தால்...! - காவல்துறை எச்சரிக்கை

முழு ஊரடங்கு.. அத்துமீறி வெளியே வந்தால்...! - காவல்துறை எச்சரிக்கை
முழு ஊரடங்கு.. அத்துமீறி வெளியே வந்தால்...! - காவல்துறை எச்சரிக்கை
Published on

முழு ஊரடங்கின் போது அத்துமீறி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னையில் இன்று இரவு 10.00 மணி முதல் 26.04.2021 தேதி அதிகாலை 04.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதன்படி 25.04.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் தனிமனித இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்கும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் பணிகளுக்காக தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. காய்கறி கடைகள் 5 மணி முதல் நண்பகல் 1 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு பார்சல் உணவு வழங்கும் நிறுவனங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 06.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. திருமணத்திற்கு 50 நபர்களுக்கு மிகாமலும் இறுதிச் சடங்கிற்கு 25 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறை பிரிவு 144-ன் படி வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த சென்னை காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இரவு முழு ஊரடங்கில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் இருக்கும் 40 மேம்பாலங்களையும் மூட காவல்துறை திட்டமிட்டுள்ளது. 700 ரோந்து வாகனங்களில் போலீசார் சென்னை முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

முழு ஊரடங்கு தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்களை (044-23452330, 044-23452362) தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com