திமுகவில் அரசியல் பயணத்தை தொடங்கி அதிமுக கூட்டணியில் எம்.எல்.ஏவாக தேர்வாகி கடைசியில் பாஜகவில் கட்சியை இணைத்துள்ள சரத்குமாரின் அரசியல் பயணத்தை, சற்றே ஒருமுறை திரும்பிப்பார்க்கும் முயற்சியே இந்த சிறப்புத் தொகுப்பு.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணியில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், இந்த தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என்று கூறப்பட்டது. அதுதொடர்பான அறிவிப்பு, இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான், இளைஞர்களின் நலனுக்கான என்று சொல்லி, பாஜகவில் தனது கட்சியை இணைத்து அதிரடி காட்டியுள்ளார் சரத்குமார்.
90களில் படு பிசியான நடிகராக வலம் வந்த நடிகர் சரத்குமார், 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் இறங்கி பரப்புரை செய்தார். அந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்த நிலையில், வெற்றிக்கு அணில் போல உதவி செய்த சரத்குமாரை, அன்றுமுதலே தனக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டார் கலைஞர்.
அதற்கு வெகுமதியாக, 1998 மக்களவை தேர்தலில் சரத்குமாருக்கு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் தோல்வியை தழுவி இருந்தாலும், 2001ம் ஆண்டு சரத்குமாருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுத்து அழகுபார்த்தது திமுக.
அடுத்தடுத்த காலங்களில் கலைஞருக்கு நெருக்கமானவர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக குமுறிய சரத்குமார், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில், சரத்குமாரும், அவரது மனைவியும் சேர்ந்தனர். ஆனால், அடுத்த ஒருசில மாதங்களில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் பதவி மற்றும் நடிப்பு போன்றவற்றால் வேலை பளு அதிகமாக இருப்பதாக கூறி அதிமுகவில் இருந்து விலகினார் சரத்குமார்.
2005 காலகட்டத்தில் தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி, தனக்கென தனி கூட்டத்தையே வைத்திருந்த மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தைப் பார்த்து, அந்த நேரத்தில் பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை துளிர் விட்டது. அதில் சரத்குமாரும் ஒருவர். ஆம், 2007ம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கிய சரத்குமார், 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் சரத்குமார் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். பின்னர், 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கைகோர்த்து போட்டியிட்டார். அந்த கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு தென்காசி மற்றும் நாங்குநேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தென்காசியில் போட்டியிட்ட சரத்குமார் உட்பட 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது சமத்துவ மக்கள் கட்சி. ஆனால், 2016ம் ஆண்டு தேர்தலின்போது அதே கூட்டணியில் தொடர்ந்தாலும், சமத்துவ மக்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பறிபோனது.
அதுதொடர்ந்து, 2021ம் ஆண்டு தேர்தலில் அரசியல் களத்தில் தன்னைவிட ஜூனியரான கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்தார் சரத்குமார். அந்த கூட்டணியில் 40 இடங்களில் போட்டியிட்ட நிலையில், அத்தனை இடங்களிலும் தோல்வியே கிடைத்தது. ஒருபக்கம் அரசியல், மறுபக்கம் சினிமா என்று இரட்டை குதிரையில் சவாரி செய்துவந்த சரத்குமார், சில மாதங்களுக்கு முன்பு ஒரு மேடையில் பேசுகையில், “திமுக எனக்கு கொடுத்த மரியாதையை அதிமுக கொடுக்கவில்லை. கருவேப்பிலை போல என்னை பயன்படுத்தினார்கள்” என்றெல்லாம் வெடித்துப்பேசினார்.
இப்படியாக இருக்க, எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து சரத்குமார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “கூட்டணி எல்லாம் வேணாம்.. நானே கட்சியில சேர்ந்துடுறேன்” என்று தடலாடி முடிவெடுத்து கட்சியையே பாஜகவில் இணைத்துள்ளார். இந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவாரா அல்லது ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதைப் போல வேறு ஏதும் ட்விஸ்ட் கொடுப்பாரா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
எழுத்து - யுவபுருஷ்