சென்னையின் முக்கியமான புறநகர் ரயில் நிலையமாக சென்னை கடற்கரை உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து கோட்டை, பார்க் ஸ்டேசன் வழியாகவும் இரண்டு வழிதடங்கள் பிரிகிறது. ஒன்று தாம்பரம் வழியாக திருமால்பூர் வரை செல்லும். மற்றொன்று வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயில் பாதை.
சென்னை கோட்டை ரயில் நிலையம் மூலமாக ஒரு நாளைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், பொதுமக்களும் தங்களது பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் சென்னை கடற்கரை முதல் எழும்பூர் வரை நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. பூங்கா நகர் ரயில் நிலையத்திலும் வேளச்சேரி செல்பவர்கள் ஏற முடியாது.
இதனால் சென்னை சென்ட்ரலுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
வேளச்சேரியில் இருந்து ஒருவர் சென்ட்ரல் செல்ல வேண்டுமானால் பூங்கா நகர் சென்றால் மட்டுமே அங்கிருந்து சென்ட்ரல் செல்ல முடியும். அதேபோல சென்னை சென்ட்ரல் வரும் பயணிகள் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ஏறி வேளச்சேரி செல்வதற்கு பதிலாக சிந்தாதிரிப்பேட்டையில் இனி ஏற வேண்டும். 7 மாதங்களுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தலைமைச் செயலகம் மற்றும் கடற்கரை ஆகிய பகுதிகளில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு மினி பஸ் விட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை மினி பஸ் அடிக்கடி விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.