விருத்தாசலத்தில் திருமண விழாவில் மணமக்களுக்கு சிலிண்டரை நண்பர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணாநகரை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி செல்வராணி. பரமசிவம் உதவி வேளாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் செல்வக்குமார். இவர் டிப்ளமோ என்ஜினியரிங் படித்து விட்டு சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஊ.மங்கலம் எலுமிச்சை கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற மணமகளுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
அப்போது விழாவிற்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள். தொடர்ந்து மணமகன் செல்வகுமாரின் நண்பர்கள் மணமக்களுக்கு கியாஸ் சிலிண்டரை அன்பளிப்பாக வழங்கினார்கள். இதனை விழாவிற்கு வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுகுறித்து அன்பளிப்பாக சிலிண்டரை கொடுத்த நண்பர்கள் கூறும்போது “ பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து விட்டது. தற்போது கியாஸ் விலையும் வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்து விட்டது. சராசரி நடுத்தர வர்க்கத்தினர் கூட கியாஸ் சிலிண்டரை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் புதிதாக திருமணமானவர்கள் விலையேற்றத்தை கண்டு கவலை அடைந்து விடக்கூடாது என்பதற்காக சிலிண்டரை அன்பளிப்பாக வழங்கினோம்” என தெரிவித்தனர்.