பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆந்திர அரசு ஆற்றின் குறுக்கே புதிதாகக் கட்டிவரும் பாலம் அபாயக்கட்டத்தில் உள்ளது.
ஆந்திராவின் குப்பம் தொகுதிக்கு உட்பட்ட கங்குத்தி என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு போக்குவரத்துக்காக புதிதாக பாலம் ஒன்றை கட்டி வருகிறது. பதினேழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் பாலத்தின் கட்டுமானப் பொருட்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் வெள்ளம் அதிகரிக்கும் என்று சித்தூர் மாவட்ட சார்ஆட்சியர் எச்சரித்துள்ளதால் பாலத்தின் கட்டுமானமும் அடித்துச் செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஏற்கனவே பயன்படுத்திவந்த தரைப்பாலமும் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் குப்பம் பகுதிக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாலாற்றின் குறுக்கே ஆந்திரா 20க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டியுள்ள நிலையில் அவற்றையும் மீறி பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தடுப்பணைகளின் உயரம் குறைவாக இருப்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பெருக்கெடுக்கும் தண்ணீரை சேமிக்க தமிழக அரசு தடுப்பணை கட்டினால் வருங்காலங்களில் பெரும் பலன் அளிக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.