தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து உரம் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சரக்கு ரயில் பெங்களூர் நோக்கி புறப்பட்டது. இதையடுத்து சேலம் தர்மபுரி போன்ற இடங்களில் உரம் மூட்டைகளை இறக்கிவிட்டு நேற்றிரவு சரக்கு ரயில் பெங்களூரூ நோக்கி சென்றுள்ளது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு சரக்கு ரயிலில் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
இதனை உணர்ந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு அருகே உள்ள ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பெயரில் விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆறு பெட்டிகள் ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டு சிறிது தூரம் ரயில் பாதையில் சென்றுள்ளது. இதனால் ரயில் பாதையில் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஸ்லீப்பர் கான்கிரீட் சேதமடைந்துள்ளது. இந்த விபத்து காரணமாக பெங்களூரில் இருந்து ஓசூர், தர்மபுரி, சேலம் வழியாக எர்ணாகுளம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் சேலம் தர்மபுரி பெங்களூரூ பாசஞ்சர் ரயில் போன்றவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு வழி பாதை என்பதால் அந்த பாதையில் ரயில் சேவை முற்றிலுமாக தடைபட்டுள்ளது. பெங்களூரூ சேலம் போன்ற இடங்களில் இருந்து ரயில்வே பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடம் புரண்ட பெட்டிகளைத் தவிர இதர பெட்டிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு சேதமடைந்த ரயில் பாதை ஸ்லீப்பர் கான்கிரீட் மாற்றப்பட்டு ரயில் சேவைகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தடம் புரண்டதற்கான காரணம் குறித்தும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.