பல்லடம் அருகே சரக்கு ஆட்டோ இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவையைச் சேர்ந்த குமரேசன் அவரது மனைவி ஆனந்தி ஆகியோரும், முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தையுடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் கோவையில் இருந்து மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலை புத்தரச்சல் அருகே வந்தபோது, எதிரே காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கிச் சென்ற சரக்கு ஆட்டோ நேருக்கு நேராக இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனங்களில் சென்ற ஐந்து பேரும் சரக்கு ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்து குறித்து அவ்வழியே சென்றவர்கள் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆனந்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் குமரேசன், முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து பலியான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த விபத்துக்கு காரணமான சரக்கு ஆட்டோ ஓட்டுநர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் நிலையில், அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.