மழை, வெள்ளம் காரணமாக சென்னை குடிசைவாசி பகுதி மக்களுக்கு 13 ஆம் தேதிவரை இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான "புரெவி" புயல் மற்றும் கனமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து புரெவி புயல் மற்றும் கனமழையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள், 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன எனவும் அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 75 குடிசை வீடுகள், 8 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 1725 குடிசை வீடுகள், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று உணவு, குடிநீர், பால் பவுடர்கள் வழங்கவும், தேவைக்கேற்ப நடமாடும் உணவகங்கள் மூலம் சூடான உணவுகளை விநியோகிக்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மழை, வெள்ளம் காரணமாக சென்னை குடிசைவாசி பகுதி மக்களுக்கு 13 ஆம் தேதி இரவு வரை இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை குடிசைப் பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பம் உள்ள நிலையில் 26 லட்சம் பேர் இதன்மூலம் பலனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மாநகராட்சி இடங்களில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.