சென்னை: வங்கியில் லோன் வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி- போலி NIA அதிகாரி கைது
சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், கட்டடங்களுக்கு பட்டிபார்க்கும் வேலை செய்து வரும் இவர், தனது தொழிலை மேம்படுத்துவதற்காக வங்கியில் லோன் கேட்க தனது நண்பர்களை அனுப்பியுள்ளார் அப்போது அவரது நண்பர்கள் மூலம் சென்னை கேகே.நகரைச் சேர்ந்த பாலாஜி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில், காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் என தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், வங்கியில் லோன் வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2016 முதல் சிறுக சிறுக ரூ.10 லட்சம் வரை விஜயகுமாரிடம் இருந்து ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் பெற்றுள்ளார். இதையடுத்து லோன் வாங்கித் தராததால் விஜயகுமார், தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
அப்போது தான், பொருளாதார குற்றப்பிரிவில் இருந்து டெல்லியில் என்ஐஏ சீக்ரெட் ஏஜெண்டாக மாறவுள்ளதாகக் கூறி பணத்தை தரமுடியாது என அவரது வீட்டில் இருந்த லத்தி மற்றும் கத்தியைக் கொண்டு மிரட்டியதாக கூறப்படுகின்றது. இதனால் அச்சமடைந்த விஜயகுமார், அவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக் கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து ராமாபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பாலாஜி, எந்தவொரு துறையிலும் வேலை செய்யவில்லை என்பதும் போலி அதிகாரி என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலாஜியைக் கைது செய்த காவல் துறையினர் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.