சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா ஆலை இருந்த இடத்தில், அடுத்த ஆண்டு முதல் புதிய செல்போன் தயாரிப்பு ஆலையை ஆப்பிள் நிறுவனம் தொடங்கவுள்ளது.
பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தயாரிப்பைத் தொடங்கியது. ரூ.21,000 கோடி அளவிலான வரி பிரச்னையால் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மூடப்பட்டது. இதன் மூலம் நேரடியாக சுமார் 7000 தொழிலாளர்கள் வரை வேலை இழந்தனர். மறைமுகமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழந்தனர்.
இதனையடுத்து, நோக்கியா நிறுவனம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, மத்திய, மாநில அரசுகள் இணைந்து முயற்சிகள் மேற்கொண்டன. அதற்காக, ஆப்பிள் நிறுவனத்தின் உள்ளூர் கிளையான ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. ஃபாக்ஸ்கான் நிறுவனம் சியோமி, நோக்கியா மற்றும் ஜியோனி உள்ளிட்ட மொபைல்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா ஆலையை எடுத்து நடத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் ஐ-போன்கள் உருவாக்கும் தொழிற்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலையை விரிவாக்கம் செய்து ஐபோன்களை தயாரிப்பதற்காக போக்ஸ்கான் நிறுவனம் 2500 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக, தமிழக தொழில்துறை அமைச்சர் ராய்ட்டர் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முதலீட்டால் சுமார் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அவர் கூறினார்.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் நோக்கியா ஆலை இருந்த இடத்தில் ஐபோன் தயாரிக்கு நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தாலும், எவ்வளவு முதலீடு என்ற தகவல் முதன்முறையாக வெளியாகியுள்ளது.