தமிழ்நாடு
டிக்டாக்கில் பிரபலமடைய சிறுத்தை வேட்டை வீடியோ - வெளியானது இளைஞர்களின் பித்தலாட்டம்.!
டிக்டாக்கில் பிரபலமடைய சிறுத்தை வேட்டை வீடியோ - வெளியானது இளைஞர்களின் பித்தலாட்டம்.!
போலியாகச் சிறுத்தை வேட்டை நடத்தி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட நான்கு இளைஞர்களுக்கு வனத்துறையினர் 1.2 லட்சம் அபராதம் விதித்தனர்.
ஒரே நாளில் புகழடைவதற்காக சில இளைஞர்கள் சேர்ந்து சிறுத்தையை வேட்டையாடியதாகக் கூறி ‘டிக்டாக்’கில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் பாறைக்குக் கீழ் ஒளிந்துள்ள சிறுத்தையைப் பிடிப்பதற்காக தீயை மூட்டி கட்டையை வைத்து வேட்டையாடுவதைப் போன்ற காட்சிப் பதிவாகி இருந்தது. இவர்கள் கடந்த வியாழக்கிழமை டிக்டாக்கில் சிறுத்தை வேட்டை என்ற பெயரில் பதிவேற்றிய இந்த வீடியோ, 15 நிமிடத்திற்குள் 1 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்திருந்தது.
இதனிடையே இந்த வீடியோ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வன அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. விசாரணையின் போது, அது பதிவு செய்யப்பட்ட இடம் தென்காசி மாவட்டத்தில் இருப்பதை அதிகாரிகள் அறிந்தனர். மேலும் தேடப்பட்டும் குற்றவாளி எஸ்.நாகராஜ் என்பது தெரியவந்தது. இவர் மஸ்கட்டில் ஃபோர்மேன் ஆக பணிபுரிந்துவிட்டு சமீபத்தில்தான் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.
மேலும் இவருடன் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட அவரது நண்பர்களான எஸ் மரிச்சாமி, எஸ் ஆனந்தராஜ், மற்றும் ஒரு மாணவர் ஆகியோரையும் காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி அருகே உள்ள மைபறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் விசாரணையில் டிக்டாக்கில் பிரபலமடைய வேண்டி, சிறுத்தை வேட்டையாடியது போல் போலியான வீடியோ வெளியிட்டது தெரியவந்தது. அதற்காக தென்காசி அருகில் உள்ள பூனைப்பாறை வனத்துறைக்குள் சென்று சிறுத்தையை வேட்டையாடுவதைப்போல நடித்து வீடியோ எடுத்துள்ளனர் என்பதை இவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இது குறித்து வன அதிகாரி ஒருவர் , "இந்த வட்டாரத்தில் சிறுத்தையே இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் பிரபலமடைவதற்காக வேண்டி தவறான செய்தியுடன் இந்த வீடியோவில் பதிவு செய்திருந்துள்ளார். அதைப் போன்ற சம்பவம் இங்கு நடக்கவில்லை ”என்று கூறினார்.
இந்நிலையில் இந்தத் தவறான வீடியோ லட்சக்கணக்கான நபர்களை எட்டியதால், சங்கரன்கோவில் ரேஞ்ச் அதிகாரி பி. கே. ஸ்டாலின் மற்றும் புளியங்குடி வன அதிகாரி எம். அசோக் குமார் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களை வைத்து மற்றொரு வீடியோவை பதிவு செய்ய வெளியிட்டுள்ளனர். அதில் அந்த இளைஞர்கள் சிறுத்தை வேட்டை போலியானது என்றும் பிரபலம் அடைவதற்காக செய்த வேலை என்றும் நீங்கள் யாரும் இதைப்போன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். மேலும் வன உயிரினங்களைக் கொள்வது சட்டப்படி குற்றம் என விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டுள்ளனர்.
இந்தச் செயலில் ஈடுபட்டதற்காக நான்கு இளைஞர்களுக்கும் சேர்ந்து ரூ .1.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரபலம் அடைவதற்காக போலியான சிறுத்தை வேட்டை வீடியோ உருவாக்கிய இவர்களுக்கு இறுதியாகக் கிடைத்தது லட்ச ரூபாய் இழப்புதான்.
இதனிடையே இவர்கள் மன்னிப்புக் கேட்கும் வீடியோ இப்போது வேகமாகப் பரவி வருகிறது.