தமிழக கோயில்களில் உள்ள சிலைகள்தான் திருடப்பட்டு குஜராத்தில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருப்பதாக கூறுவது எந்தவித அடிப்படை ஆதாரம் அற்றது மற்றும் கற்பனையானது என அறக்கட்டளை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த சாராபாய் அறக்கட்டளை, “ குஜராத் அருங்காட்சியத்தில் உள்ள சிலைகள் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமானது என்பதற்கான எந்தவித ஆதாரத்தையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் இவ்வாறு குற்றம்சாட்டுவது கேலிக்குரியது.
இரண்டாவதாக, சிலைகள் 200 முதல் 1000 ஆண்டுகள் வரை பழைமையானது என்பதை உறுதிப்படுத்தவும் எந்தவொரு ஆதாரமும் இல்லை. இப்படி எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் மனுதாரர் வெறும் கற்பனையில் மட்டுமே இதனை கூறுகிறார்” என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவே எல்லாவற்றிற்கும் ஆதாரம் என தெரிவித்தார்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள ராஜராஜ சோழன் சிலை உள்ளிட்ட முக்கிய சிலைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யும்படி கடந்த மார்ச் 2-ஆம் தேதி சாராபாய் அறக்கட்டளை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், 1942-ஆம் ஆண்டில் இருந்தே சாராபாய் அறக்கட்டளையில் உள்ள அருங்காட்சியத்தில் இரண்டு சிலைகள் இருந்ததாகவும், அந்த சிலையை சிலைக் கடத்தல் தடுப்பு சிஐடி அதிகாரிகள் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 1960-ஆம் ஆண்டில்தான் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் சிலைகள் காணாமல் போனது எனவும் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.