சென்னை தியாகராய நகரில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை நல்வாய்ப்பாக சிறிய காயத்துடன் உயிர் பிழைத்துள்ளது.
சென்னை தியாகராய நகரின் மகாராஜபுரம் சந்தான சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. 4 மாடிகள் கொண்ட குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அருண்குமார் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அருண் ஆரணியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றுகிறார். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் ஆரணியில் தங்கி பணிபுரிவார் அருண். இவரது மனைவி பரிமளா ஒன்றரை வயது மகன் பரத் மற்றும் உறவினர்களுடன் தியாகராய நகர் வீட்டில் தங்கியிருந்தார்.
பரிமளா தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் வேலைக்குச் சென்றபின் குழந்தையை உறவினர்கள் பார்த்துக் கொள்வார்கள். வியாழக்கிழமை காலை குழந்தை பரத் வீட்டில் உள்ள பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தான். உடன் இருந்த பரிமளா வீட்டிற்குள் சென்ற நேரத்தில் பரத் பால்கனி இடைவெளி வழியாக இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளான். அதனை அறியாமல் வீட்டிற்குள் இருந்தார் பரிமளா. குழந்தை விழுந்ததை சாலையில் சென்ற ஒருவர் பார்த்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் ஓடிவந்து குழந்தையை தூக்கியுள்ளார். குழந்தை தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. வலியால் அலறித்துடித்தான் பரத்.
குழந்தைக்கு என்ன ஆனதோ என பதற்றத்துடன் பரிமளா உள்ளிட்டோர் சாலையில் நின்றிருந்த போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நிலைமையை உணர்ந்து குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவியுள்ளார். தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டபின் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான் பரத். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் ஏற்பட்ட சிறிய காயத்தை தவிர வேறு எந்த பாதிப்பும் இல்லையெனக் கூறினர்.
சிகிச்சைக்குப்பின் பரத் தற்போது நலமுடன் உள்ளான். இரண்டு வழிப்போக்கர்களின் உதவியால் குழந்தை உயிர் பிழைத்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதையும், பால்கனி கட்டமைப்பு எவ்வாறு இருக்கக்கூடாது என்பதையும் பரத்தின் மறுபிறவி மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.