நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், தமிழொளி என்ற முதுகலை பட்டதாரி ஆசிரியரொருவர், 6 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றி கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றுள்ளார். இருப்பினும் அதற்கு முன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாய்மேடு கிராமத்தில் நியூட்டன் பயிற்சி மையத்தை நடத்தி மாணவர்களுக்கு கல்வி போதித்து வந்துள்ளார் அவர். இதையொட்டி அவரது முன்னாள் மாணவர்கள், அவருக்கு பாராட்டு விழா நடத்தி கார் நினைவு பரிசு வழங்கி தங்களின் நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆசிரியர் தமிழொளியிடம் கல்வி பயின்ற அவரின் முன்னாள் மாணவர்கள் பலரும் வருவாய்த் துறை உட்பட அரசின் பல்வேறு துறைகளிலும் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள்தான் இணைந்து ஆசிரியர் தமிழொளிக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.
இதற்காக ஆசிரியர் தமிழொளிக்கு அவருடைய சொந்த ஊரான பஞ்சநதிக்குளத்தில் பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள், ஆசிரியரை மேள தாளத்துடன் அழைத்து வந்து அவருக்கு ரூ9.6 லட்சம் மதிப்புள்ள காரை நினைவுப் பரிசாக வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் கலந்து கொண்டு முன்னாள மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்ட காரின் சாவியை ஆசிரியர் தமிழொளியிடம் வழங்கினார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பலன்தரும் மரக்கன்றுகள், மூலிகை செடிகள், பாரம்பரிய விதைகள் வழங்கப்பட்டன. கவிஞர் நந்தலாலா, கோட்டாட்சியர் மதியழகன் உட்பட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு ஆசிரியர் தமிழொளியை பாராட்டி பேசினர்.