புதுச்சேரியில் மகாத்மா காந்தி வீதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 1972 மற்றும் 73 ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் பல துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் படித்த பள்ளியில் ஒரு ரீ யூனியன் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இன்று பள்ளிக்கு வந்த அவர்கள், மாணவர்களோடு மாணவர்களாக வரிசையில் நின்று பிரேயர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, “அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே” என்றபடி தாங்கள் இந்த பள்ளியில் பயின்ற அனுபவங்களையும், நினைவுகளையும் அசைபோட்டனர். எந்தெந்த துறைகளில் சிறப்பாக விளங்கலாம் என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் பள்ளி ஆசிரியர்களுடைய அறிவுறுத்தல்களை ஏற்றுக் கொள்வது, அவர்களின் கட்டளைக்கு கீழ்படிவது உள்ளிட்ட குணாதிசயங்களை கற்றுக் கொண்டதால், பல அரசு துறைகளில் உயர் பதவியில் நீடிக்க முடிந்தது என்றும் தங்களது அனுபவங்களை மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் இந்நாள் மாணவர்களுடன் அனுபவத்தை பகிர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.